அரசியல்மலையகம்

யாரும் என்னிடம் 1000 ரூபா கோரிக்கை விடுக்கவில்லை – மகிந்த

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் யாரும் முன்வைக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தமிழ் செய்தி ஆசிரியர்களுடனான விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதன் போது கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, மொத்த சம்பளமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் கோரியதாகவும், அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் யாரும் கோரவில்லை என்றும் கூறினார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 1000 ரூபாய் நாளாந்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக குறித்த தொழிற்சங்கங்களின் தலைவர்களால் கருத்துக்கள் வெளியிக்கப்பட்டன.

எனினும் இதனை மறுத்த எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, அவர்கள் யாரும் தம்மிடம் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று கூறினார். நல்லாட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை அடிப்படை வேதமான பெற்றுக்கொடுப்பதாகவும் முடியாத பட்சத்தில் பெற்றுக்கொண்டுள்ள அமைச்சுப் பதவியினை ராஜினாமா செய்வதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியினை மீண்டும் கைப்பற்றியதனை தொடர்ந்து அமைச்சுப் பதவியினை இழந்த ஆறுமுகன் தொண்டமான் ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்புரிமையையும் விட்டு விலகுவதாக வாக்குறுதி அளித்து வெறுமனே 700 ரூபாய்க்கு கையொப்பமிட்டு அமைதி காத்து நிற்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் ஆட்சிக்கவிழ்ப்பின் போது பிரதமராகவும் , தற்போது எதிர்கட்சித்தலைவராகவும் இருக்கின்ற மகிந்த ராஜபக்ஸவிடம் செய்தியாளர்கள் வினவினர். இதற்கு பதிலளித்த அவர் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக தேவையென எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை. மாறாக நிபந்தனை அடிப்படையிலான வேதனமாகவே ஆயிரம் ரூபாய் வேதனத்தை கோரியிருந்தனர் எனத் தெரிவித்திருந்தார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!