செய்திகள்விளையாட்டு

அச்சத்தில் ஒலிம்பிக் வீரர்கள் ; திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா.?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, வருகிற ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

உலகில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் போட்டிகளை நடத்த ஜப்பான் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், டோக்கியோவில் தற்போது அவசர நிலை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இதன்காரணமாக, அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போட்டியில் கலந்து கொள்ளும் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் ஒரு தடகள வீரர் மற்றும் 5 ஒலிம்பிக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரேசில் ஒலிம்பிக் போட்டி வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் சில ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரேசில் அணியின் சுமார் 30 பேர் கொண்ட ஜூடோ குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரஷியாவின் ரக்பி செவன்ஸ் அணி ஊழியர் ஒருவர் கொரோனா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் ஒரு தடகள வீரர், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஒரு விளையாட்டு ஊழியர் உள்பட ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டோக்கியோவில் நேற்று மட்டும் 1,149 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் காட்டப்படும் மிக உயர்ந்தபட்ச எண்ணிக்கையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button