செய்திகள்

அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் உடலம் மீண்டும் தோண்டியெடுத்து விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தின் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி உடலை தோண்டியெடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் சரீரத்தை மீண்டும் தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரி்சோதனை மேற்கொள்ளுமாறு இதன்போது நீதிவான் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினர் சந்தேகங்களை முன்வைத்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவிடம் இது தொடர்பான விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டன.

இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 30க்கும் அதிகமானோரிடம் காவல்துறையினர் வாக்குமூலத்தையும் பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இன்றையதினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை கையளித்தனர்.

தனது மகள் பணியாற்றிய வீட்டில் அவர் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவரது மரண வாக்குமூலம் சந்தேகம் உள்ளதால் அது தொடர்பிலும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இந்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளதாக சிறுமியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Related Articles

Back to top button
image download