அரசியல்மலையகம்

அட்டன், மல்லியப்பு சந்தியில் 1000 ரூபா சம்பளம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் -களத்தில் திகாம்பரம்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறவேண்டும். அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று அட்டன், மல்லியப்பு சந்தியில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ. ஶ்ரீதரன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என கோஷம் எழுப்பட்டதுடன், தற்போதைய வாழ்க்கைச்சுமை அதிகரிப்பையும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

கிஷாந்தன்

போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கமைய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற திகாம்பரம் கூறியதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். அதனை நோக்கியே பேச்சுவார்த்தை தொடரவேண்டும். அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் கையொப்பமிடமாட்டேன் என்று வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்பை வரவேற்கின்றோம். அதேபோல் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் ஏனைய தொழிற்சங்கங்களும் வெளியேறவேண்டும். அவ்வாறு வெளியில் வந்தால் அனைவரும் இணைந்து போராடலாம்.” – என்றார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com