ஆன்மீகம்

அட்டன் மாணிக்கப் பிள்ளையார்

எட்டுத்திக்கும் அருள் பரப்பி ஏற்றிடய்யா கருணைஒளி
மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே
ஓட்டிவிடு தீமைகளை ஒளிரச் செய்வாய் நன்மைகளை
அட்டன் மாநகரமர்ந்த மாணிக்கப்பிள்ளையாரே..

மலை சூழ்ந்த மாநிலத்தில் குன்றினிலே குடிகொண்டாய்
அலைமோதும் மனங்களிலே ஆறுதலைத் தருவோனே
நிலைகுலையா நிம்மதிக்கு உன் துணையே வேண்டுமய்யா
தலை தாழ்த்தி வணங்குகின்றோம் மாணிக்கப்பிள்ளையாரே..

எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே
வழித்துணையாயிருந்தெமக்கு நல்லவழி காட்டிடய்யா
இழி நிலையைப் போக்கிவிடு இன்பநிலைதந்துவிடு
விழி மலர்ந்து நிற்பவனே மாணிக்கப்பிள்ளையாரே…

சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை ஒளிநீயே
கிலி கொண்டு துவண்டு நிற்போர் துயர் போக்கிஅருள்வோனே
வலிந்து வரும் துன்பநிலை அகற்றிவழிகாட்டிடுவாய்
நலிவில்லா நலமளிக்கும் மாணிக்கப்பிள்ளையாரே…

நன்மைகள் பெருகிடவும் நானிலத்தோர் மகிழ்ந்திடவும்
உண்மையெங்கும் ஓங்கிடவும் ஊரெல்லாம் செழித்திடவும்
மென்மையுள்ளம் கொண்டவனே அடிபணிந்தோம் உந்தனையே
அன்பை பெருக்கியெம்மை ஆட்கொள்ளும் மாணிக்கப்பிள்ளையாரே..

வீதிவலம் வந்து நலம் அருளுகின்ற திருமகனே
நாதியில்லை என்றநிலை எமக்கென்றும் இல்லையைய்யா
ஆதிசிவன் பெற்றமகன் அருகினிலே நீயிருக்க
கதி நீயே கருணை செய்து ஆட்கொள்வாய் மாணிக்கப்பிள்ளையாரே.

ஆக்கம்- த.மனோகரன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com