செய்திகள்

அனுராதபுரம் அருள்மிகு கதிரேசன் திருக்கோயில் 

கதிரொளி பாய்ச்சி யெங்கும் அருளொளி பரப்பும் ஐயா
விதி வழி நின்று எம்மை நல்வழி நடத்தல் வேண்டும் 
மதிதனில் நீயிருந்து மருட்சியைப் போக்கிவிட்டால்
துதி செய்துன்னடி பணிவோர் துன்பங்கள் நீங்கிடுமே.. 
மாமன்னன் எல்லாளன் ஆண்ட நன்னிலத்தினிலே
நல்வழி காட்டவென்று அமர்ந்தருள் செய்யும் ஐயா 
அல்லல் அகன்றிடவே அருளிட வந்திடய்யா
தில்லையில் ஆடுகின்ற சிவபிரான் இளமகனே.. 
வடமத்திய மாநிலத்தின் தலைநகரான நல்லூர் 
திடமாக நின்றருளும் திருமகள் மருமகனே
இடர் போக்கியெம்மைக் காக்க கருணை நீ செய்திடய்யா
பாடலால் உனைத் துதித்தோம் அனுராதபுரம் அமர்ந்தவேலே.. 
வேல் தாங்கி வந்தெமது வேதனை களையும் நல்லோய்
வெல்லவே நல்லவர்கள் வீணர்கள் அடங்கி விட
வல்லவுன் கருணை வெள்ளம் பெருகியே ஓடவேண்டும்
நல்லருள் நல்கிவிட விரைந்து வா திருக்குமரா.. 
தீவகம் முழுவதுமே தீமைகள் ஒழிந்து விட
பாவங்கள் யாவையுமே உன் பார்வையால் நீங்கிவிட
நவமணிமாலை சூடும் நாயகா அருளிடுவாய்
சிவவழி நின்றுன் பாதம் சேவிப்போம் திருமுருகா.. 
அனுராதபுரம் நன்னகரில் கோயில் கொண்ட சிவன் மகனே
அருகினிலே நீயிருந்து ஆறுதல் தந்து விட்டால் 
திருவருள் நிறைந்து விடும், தீமைகள் மறைந்து விடும்
தருமமே மலர்ந்து நலம் பொங்கிடும் சுவாமிநாதா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button