செய்திகள்

அனைத்து ஆளுநர்களையும் அழைத்து பிரச்சினைக்கு முடிவு.

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளி கல்வி தொடர்பிலான தேசிய கொள்கை பிரகடனத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை பிரகடனம் இதுவரை நாட்டில் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுடன் முன்பள்ளி கல்வியை வலுப்படுத்தவும் ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் இந்த கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும், ஆளுநர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கும் இடையில் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த தகவல் வெளியானது.

அதற்கமைய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் சிறுபராய வளர்ச்சி குறித்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கலந்தாலோசித்து அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய குறித்த கொள்கை பிரகடனத்தை தயாரிக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படும் குழந்தைப்பருவ மேம்பாடு குறித்த தேசிய கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்காக இந்த சந்திப்பில் பங்கேற்ற அனைத்து ஆளுநர்களும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மாகாண மட்டத்தில் காணப்படும் கல்வி, சுகாதார பிரச்சினைகள் மற்றும் மாகாண அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் அதேபோல் குறித்த திட்டத்தை நடைமுறைபடுத்தும் போது எழும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலங்களில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அனைத்து ஆளுநர்களையும் அழைத்து இந்த பிரச்சினை தொடர்பில் கொள்கை ரீதியான முடிவு ஒன்று எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
image download