...
செய்திகள்

அனைத்து மதங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர்

நாடொன்றின் உண்மையான  அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் பொருளாதார அபிவிருத்தி போன்றே ஆன்மிக ரீதியான அபிவிருத்தியும் இடம்பெறவேண்டும். அதேபோன்று நாட்டின் அரசியலமைப்பிற்கிணங்க அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டின் பிரஜைகளை சிறந்த குணாதிசயம் மற்றும் ஒழுக்கமுள்ள பிரஜைகளாக உருவாக்குவதற்கான பொறுப்பு புத்த சாசன,மத அலுவல்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கடந்த  2,500 வருடங்களாக புத்த சாசனத்தின் உன்னதத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டது போல எதிர்காலத்திலும் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.

இலங்கையின் கலாசாரம் மற்றும் ஒழுக்கமுள்ள மக்களை உருவாக்குதல் அதேபோன்று புத்த சாசனத்தை பாதுகாப்பதும் அனைவரதும் தேசிய பொறுப்பாகும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

அதற்கிணங்க புத்த தர்மத்தை திரிபு படுத்தாமல் பாதுகாப்பது, புத்த சாசனத்தை பாதுகாப்பது, பௌத்த மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவது, பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் அனைத்து மதம் தொடர்பான நடவடிக்கைகள் எமது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கிணங்க அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.

அதற்கிணங்க அனைத்து மத வழிபாட்டு தலங்களை அபிவிருத்தி செய்வது,அனைத்து மதத் தலைவர்களின் கல்வி, மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அதேபோன்று ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கும் பல்வேறு திட்டங்களை புத்த சாசன, மத விவகார, கலாசார அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.  நாட்டில் நிலையான  அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் பொருளாதார அபிவிருத்தியைப் போன்றே ஆன்மீக ரீதியான அபிவிருத்தியும் அவசியமாகும். 

மேலும் அறநெறி பாடசாலைகள் கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வருடாந்தம் பெருமளவு நிதி ஒதுக்கப்படுவதுடன் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் ஊடாக அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. 

மதங்களுக்கிடையில் சகவாழ்வை மேலும் அதிகரித்து அந்நியோன்னிய ஒத்துழைப்புடன் வாழும் சமூகம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகவே இந்த விடயங்களை செய்கின்றோம். 

அத்துடன் ஒழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு தடையாக இருப்பது போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு அநாகரிமான செயல்களுக்கு செல்வதாகும். அவ்வாறான நபர்களை அறிந்துகொண்டு மதப் பின்னணியின் கீழ் அவர்களை புனர்வாழ்வளித்து சமூக மயமாக்கும் வேலைத்திட்டம் எமது அமைச்சினால் முன்னெடுத்து இருக்கின்றோம். 

அதனை 2022ஆம் வருடத்திலும் தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen