உலகம்

அமேசன் தீயை அணைக்க இராணுவத்தை அனுப்புகிறது பிரேசில்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமேசன் காட்டுத் தீ விவகாரம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகநாடுகளின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ உத்தரவிட்டுள்ளார்.

அமேசன் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமுலாக்கப் போவதில்லை என்றும் பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து நாடுகள் தெரிவித்துள்ளன. 

அதேநேரம் காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

2019ஆம் ஆண்டில் மட்டும் 73 ஆயிரம் தீ சம்பவங்கள் அமேசன் மழைக்காடுகளில் நடந்துள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது. 
இதுதொடர்பில் நாசா ஏற்கனவே பிரேசிலுக்கு எச்சரிக்கை பிறப்பித்திருந்தது. 

எனினும் இதனை கண்டுகொள்ளாத பிரேசில் தொடர்ந்தும் அலட்சியத்துடன் செயற்பட்டது.

தற்போது இந்த விடயம் சமூக வலைத்தளங்கள் உட்பட உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக பிரேசிலுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றங்கள் தொடர்பில் நம்பிக்கையில்லாத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது இவ்விடயம் தொடர்பாக அமெரிக்கா உதவத்தயாராக இருப்பதாக டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்ககளுக்கு மேலாக அமேசன் காடுகளில் தீ எரிந்து வருகின்றது. 
இந்த காட்டுத் தீயால் பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமேசனாஸ் ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

20 மில்லியனுக்கும் அதிகமான பிரேசிலியர்கள் இந்த பிராந்தியத்தில் வாழ்வதாகவும் 2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மட்டும் அமேசன் மழைக்காடுகள் பற்றி எரியும் சம்பவம் 85 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசன் காடுகள், தென் அமெரிக்க கண்டத்தில் 5.5 மில்லியன் ஹெக்டேர் அளவில் பரவியுள்ளது.

தொடர்ந்து தீ எரிவதால் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, ஜனாதிபதி தேர்தலுக்காக அமேசன் காட்டைப் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தியிருந்ததாக அவர்மீது பிரேசிலைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button