அரசியல்செய்திகள்

அமைச்சர்களுக்கான விடயதானங்களை பகிர்ந்தளிக்கும் விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது

அமைச்சர்களுக்கான விடயதானங்களை பகிர்ந்தளிக்கும் விசேட வர்த்தமானி, இன்று அதிகாலை வௌியிடப்பட்டது.

இந்த வர்த்தமானியின் பிரகாரம் கடந்த அரசாங்கத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் காணப்பட்ட பல நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் ஆகியன பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படவுள்ளன.

இதனைதவிர, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், தேசிய அபாயகரமான ஔடத கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியனவும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஊடக நிலையம், அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான செயலகங்கள், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை அவசர அழைப்பு பிரிவு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனைத்தவிர ரக்னா லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் தலைமை அலுவலகம், இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், அரச புலனாய்வு சேவை, இராணுவ சேவை அதிகார சபை, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாதுகாப்பு சேவை கட்டளை அதிகார கல்லூரி, பாதுகாப்பு சேவை பாடசாலை, தேசிய மாணவர் படையணி, தேசிய பாதுகாப்பு நிதியம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம், இலங்கை கரையோரப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை லொஜிஸ்டிக் லிமிடட் நிறுவனம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள ஏனைய நிறுவனங்களாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சுப் பதவியை வகிக்கும், நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை வகுப்பு அமைச்சின் கீழ், திரைசேறி, தேசிய திட்டமிடல் திணைக்களம், அரச நிதி கொள்கை திணைக்களம், மத்திய வங்கி உள்ளிட்ட 48 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரதமரின் அமைச்சுக்களில் ஒன்றான, புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத விவகார அமைச்சின் கீழ், பௌத்த விவகார திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், பொது செயல்திறன் சபை, அருங்காட்சியங்கள் திணைக்களம், தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ், 17 நிறுனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியன அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

திறன் விருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ், 19 நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அந்த அமைச்சுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button