...
செய்திகள்

அம்பாறை- நிந்தவூர்-  அட்டப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ சிங்காரபுர மாரியம்மன் திருக்கோயில் 

எட்டுத்திக்கும் அருள்பரப்பி வளம் பெருக்கும் மாரியம்மன் 
அட்டப்பள்ளம் கோயில் கொண்டு எமக்கருள வந்துவிட்டாள்
மட்டில்லா பேருவகை வாழ்க்கையிலே நாமடைய
கிட்டிவந்து அணைத்தருள்வாள் அவளடியைச் சரணடைவோம்
அம்பாறை மாவட்டத்தில் வந்தமர்ந்த மாரியம்மன்  
எம்குறையைத் தீர்த்தருள இதமாக வந்துவிட்டாள் 
தொட்டதெல்லாம் துலங்க நம்வாழ்வு நலமடைய
முந்திவந்து அருளிடுவாள் அவளடியைச் சரணடைவோம் 
நிந்தவூர் நல்லூரில் கோயில் கொண்ட மாரியம்மன்
அந்தரத்திலிருந்து எமைக்காக்க வந்துவிட்டாள் 
எக்குறையுமெமக்கில்லையென்ற நிலை நாமடைய
உரியவழி காட்டிடுவாள் அவளடியைச் சரணடைவோம் 
சிங்காரபுர மாரியம்மன் என்ற பெயர் கொண்ட மாரியம்மன் 
சீராக நாம் வாழ வழியமைக்க வந்துவிட்டாள் 
அஞ்சும் நிலையெமக்கில்லை என்ற நிலை நாமடைய
நெஞ்சகத்தில் உறுதிபெற அவளடியைச் சரணடைவோம் 
அண்டவரும் தீமைகளை அகற்றி விடும் மாரியம்மன் 
என்றுமுடனிருந் தெமக்குதவ வந்துவிட்டாள் 
துன்பமொன்றுமில்லை யென்ற உயர்நிலையை நாமடைய
ஓங்கி நாம் ஒலித்துவாழ அவளடியைச் சரணடைவோம் 
பஞ்சமா பாதகங்களை அகற்றி யெம்மைக் காக்கும் மாரியம்மன் 
தீமைகளைத்துடைத்தெறிய திடங்கொண்டு வந்துவிட்டாள் 
தொல்லையில்லா எதிர்காலம் உறுதியாய் நாமடைய 
சிங்காரபுர மாரியம்மன் 
திருவடியைச் சரணடைவோம். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen