செய்திகள்

அம்பாறை மாவட்டம்- திருக்கோயில் பிரதேச தம்பிலுவில் அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில்…

தென்கிழக்குத் திசையினிலே தமிழ் மணக்கும் திருமண்ணில்
கோயில் கொண்டு அருளளிக்கும் தாயே
நின் கருணை நீக்கமற எங்கும் நிறைந்திடவே
வாழ்த்தி வணங்குகின்றோம் தாயே கண்ணகி அம்மா 
கொடுமை செய்வோர் நிலைகுலைந்து தலை தாழ
தயங்காது விரைந்து வந்துன் ஆற்றலை வெளிப்படுத்து தாயே
கொற்றவையாய் அன்று நம்குலம் காக்க வந்தவள் நீ
கண்ணகியாய் அரசவையில் சிலம்பேந்தி நீதி கேட்டவுன் திருவடியைத் தொழுகின்றோம் தாயே கண்ணகி அம்மா 
ஆண்டிலொருமுறையுன் திருக்கதவு திறப்பதுவும்
வைகாசிப் பூரணையில் அக்கதவு மூடுவதும்
வழக்கமாய்க் கொண்டவளே தாயே
உன்னை மனத்திருத்தி அருள் வேண்டிநிற்குமெம்மை
காத்தருள வேண்டுகின்றோம் தாயே கண்ணகி அம்மா 
ஆணவத்தால் தடுமாறி அநீதிக்குத் துணை போகும்
அரக்கமனம் கொண்டோர் தம் ஆணவத்தை அடக்கிடவும்
தரணியிலே அறம் பெருகி தளைத்தோங்க காப்பளித்தும்
கொடுஞ் செயல்கள் வேரறுப்பாய் தாயே கண்ணகி அம்மா 
சுயநலமும், வஞ்சகமும் கொண்டுலாவும் தீயவர்கள்
நிலைகுலைந்து வீழ்ந்தழிந்து போயிடவும்
நேர்மையும், நிதானமும், நன்நெறியும் நிலைபெற்று நின்றிடவும்
தவறாது உடனருள்வாய் தாயே கண்ணகி அம்மா 
தம்பிலுவில் தமிழ் மண்ணில் குடியிருக்கும் திருமகளே
தயங்காது உடன் தோன்றி தருமத்தைக் காத்திடவும்
தமிழ்த் தாயின் தெய்வமகள் தரணியே போற்றுமன்னை நீ
எங்கள் நலன் காக்க, குலங் காக்க கருணை கொள்வாய் விரைந் தருள்வாய் தாயே கண்ணகி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button