ஆன்மீகம்

அம்பாறை மாவட்டம்- திருக்கோயில் அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில்

செங்கமலத் திருப்பாதம் பதிந்த இடம்
சீறிவந்த வேல்தரித்து நின்றஇடம்
சங்கடங்கள் தீர்த்தருளும் புனிதஇடம்
சங்கரனார் திருமகனார் உறையும் கோயில்..

தென்கிழக்குத் திசையிருந்து அருளும் இடம்
தென்னாடு கொண்ட சிவன் மைந்தன்இடம்
வலுதந்து துடிப்பேற்றும் திவ்வியஇடம்
வாழநல்ல வழிகாட்டும் குமரன்கோயில்..

உமையவளின் இளமகனார் உறையும்இடம்
உத்தமர்கள் போற்றிநிற்கும் இனியஇடம்
இன்னல் களைந்து நலம் நல்கும் கருணைஇடம்
இறைவன்எம் திருமுருகன் உள்ளகோயில்..

நல்லவர்கள் நாடிவந்து பணியும்இடம்
நலங்கள்பல தந்தெம்மைக் காக்கும்இடம்
மறம்களைந்து அறம்நிலவி நிற்கும்இடம்
மலர்ப்பாதன் கந்தவேள் அமர்ந்தகோயில்..

மயிலமர்ந்து மதிதருவோன் உள்ளஇடம்
மாநிலத்தில் கருணையொளி பாய்ச்சும்இடம்
விண்ணவரும் போற்றிநிற்கும் புண்ணியஇடம்
வீரவேல் கொண்டஎங்கள் வேலன்கோயில்..

மழுவரசன் திருப்பணிகள் செய்தஇடம்
மாசகற்றும் வள்ளி மணவாளன்இடம்
பண்டுமுதல் நிலைத்திருந்து அருளும்இடம்
பழம்பெருமை கொள்அழகன் திருக்கோயில்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button