அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

தமது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக 8வது நாளாகவும் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பையோ அல்லது குறுகிய கால புனர்வாழ்வினை வழங்கியோ விரைவில் இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விடயம் தாமதிக்கப்படும் பட்சத்தில் வட மாகாணம் தழுவிய போராட்டங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.