செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை!

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களை வெளிநாடுகளில் பணியமர்த்துவதற்காக வடிவமைக்கப்படதல்ல. அரச உத்தியோகத்தர் வெளிநாட்டில் பணிபுரிய விரும்பினால், அவரே வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவைக் காலம் மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“அரசாங்க உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல்கள் தொடர்பான புதிய சுற்றறிக்கைகள்” என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .

அரசாங்க ஊழியர்கள் குறிப்பிட்ட வெற்றிடங்களின் அடிப்படையிலேயே நிறுவனங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். ஆனால் காலத்துக்குக் காலம் அரசாங்கக் கொள்கைகளுக்கு அமைவாகப் பெருமளவிலான மக்கள் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். பெரும்பாலான அதிகாரிகளுக்கு நிரந்தர வேலை கூட இல்லாததால் பலர் வெளிநாடு செல்ல தீர்மானித்துள்ளனர்.

புதிய சுற்றறிக்கையின் விதிகளின்படி, அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், வெளிநாட்டில் பணியாற்றுவதற்குத் தேவையான திறன்களை வளர்ப்பதற்குத் அவசியமான உள்நாட்டு பயிற்சிகளுக்கும் சம்பளம் இல்லாத விடுமுறை எடுக்க முடியும். தகுதிகாண் காலத்தை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்களும் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய பின்னர் தங்களின் தகுதிகாண் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button