மலையகம்

அறிக்கை விடுத்த தமிழக அரசியல்வாதிகளுக்கு மலையகம் அழைப்பு

 

தமிழக அரசியல் களத்தில் அமைச்சர் திகாம்பரம்
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர்ப்பலகை நீக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து வெளியான அறிக்கைகளுக்கான தெளிவுபடுத்தலைச் செய்ததோடு அவர்களை மலையகத்திற்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கண்டறியுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு கடந்த திங்களன்று (20.11.2017) நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோரைச் சந்தித்து குறித்த பிரச்சினை தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்கியதுடன் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடாத்தி நிலைமைகளை நேரில் கண்டடைய மலையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளானர்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் தேசிய தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவருக்கு பழைய பாராளுமன்ற முன்றலில் சிலையும் புதிய பாராளுமன்றில் உருவப்படமும் வைக்கப்பட்டு இலங்கை அரசினால் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கள அரசு அன்னாரது பெயரில் அமைக்கப்பட்ட கல்லூரியின் பெயர்ப் பலகையை நீக்கியதாக தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளமையை தெளிவுபடுத்தியுள்ளதாகவும், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களையும் நிர்வகிப்பதாக ஏற்பாடு செய்து சௌமியமூர்த்தி தொண்டமான் என்பதற்கு பதிலாக தொண்டமான் எனும் பெயரே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த தொண்டமான் என்ற பெயருடனேயே அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி தமது அரசியலை குடும்ப அரசியலை முன்னெடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் சௌமியமூர்த்தி தொண்டமான் எனும் பெயர் நீக்கப்படவில்லை என்பதையும் அவர் பெயரிலான மன்றம்; இயங்குவதில் இலங்கை அரசு எவ்வித தடங்களையும் எற்படுத்தவில்லை என்பதையும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் சூழலில் சிங்கள அரசு என பரப்புரை செய்வதன் ஊடாக அங்கு ஏற்கனவே நிலவும் தமிழுணர்வு சூழல் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இரண்டறக்கலந்து வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையை இலங்கையில் தோற்றுவிக்கக்கூடும். எனவே சிங்கள அரசு என்ற மனநிலை மாற்றப்படுதல் வேண்டும் என்றும் இலங்கையில் ஆட்சி நடத்துவது இலங்கை அரசே அன்றி அது சிங்கள அரசு என சொல்லப்படுவதில்லை என்றும் அதில் முறைப்பாட்டினை செய்த மலையகத் தமிழ்க்கட்சியும் கூட அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்று இரண்டு மாகாண அமைச்சுக்களை கொண்டுள்ளதாகவும் பாராளுமன்றில் இரண்டு ஆசனங்களைக் கொண்டு ஆளும் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் செயற்படக்கூடிய அரசியல் கட்சிகளுக்கிடையே அரசியல் போட்டிகள் காரணமாக இந்த பெயர் மாற்றப்பிரச்சினை தூக்கிப்பிடிக்கப்படுகின்றதே தவிர இலங்கை அரசியலில் தேசிய ரீதியாக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயருக்கு எந்த அபகீர்த்தியம் ஏற்பட போவதில்லை எனவும் அன்னாரின் பெயரில் உருவாக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் பாராளுமன்றில் கூட்டிணைக்கபட்ட சட்டத்தின் படி அந்த மன்றத்தை அவர்களது பரம்பரை உறவுகளும் அவர்களது கட்சியும் தமது நிதியில் கொடை நிறுவனமாக கொண்டு நடாத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதுவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய மன்றத்தின் கீழ் அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே குறித்த நிறுவனங்கள் நான்கும் அது உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த பெயரில் தொடர்ந்து இயங்குமாறு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படியே இப்போது இயக்கப்பட்டு வருகின்றது. மன்றத்தின் பெயரில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் நிதி ஊழல் மோசடிகள் பற்றிய விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையிலும் அரசியல் நோக்கத்துடன் தமிழக ஊடகங்களைக் கையாண்டு உணர்வுகளைத் தூண்டும் விதமாக இவ்விவகாரம் கையாளப்பட்டுள்ளதாகவும் விபரங்களை நேரில் கண்டடைய அறிக்கை விட்ட அரசியல் தலைவர்கள் மலையகத்துக்கு விஜயம் செய்து உண்மையை கண்டறியமாறும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவுபடுத்தலை செவிமடுத்த தமிழக அரசியல் தலைவர்கள் தமக்கு ஒரு பக்க சார்பாகவே இந்த செய்தி சொல்லப்பட்டதாகவும் சிங்கள அரசு இத்தகைய காரியத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டதனால் உணர்ச்சி மேலோங்கி தமிழுணர்வுடன் தமது அறிக்கைகளை வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சினை பொருத்தமற்ற வகையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டதுபோல் உணர்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் அமைச்சர் திகாம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button