விளையாட்டு

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று

பாகிஸ்த்தானை வீழ்த்துமா இலங்கை

15-ஆவது ஆசிய கிரிக்கெட் கிண்ணத் தொடரின் ,இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (11) துபாயில் நடைபெறவுள்ளது.

போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சுப்பர் போர் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்த இரு அணிகளும் நடப்புச் சம்பியனும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த அணியுமான இந்தியாவை வெளியேற்றி ,இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி இந்த போட்டித் தொடரில் வெளிப்படுத்திய ஆற்றலை இந்திய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

எழுச்சி கண்ட இலங்கை அணி ,இந்த தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

15-ஆவது ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) கடந்த மாதம் 27 – ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), ஆப்கானிஸ்தான், இலங்கை (பி பிரிவு) அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

15-ஆவது ஆசிய கிரிக்கெட் கிண்ணத் தொடரில் இலங்கை கடைசியாக ஆடிய மூன்று டி20 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.

வெற்றி பெறாத ஹாங்காங், வங்காளதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன. சூப்பர்4 சுற்றில் இலங்கை அணி 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

பாகிஸ்தான் அணி (2 வெற்றி, ஒரு தோல்வி) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நடப்பு சாம்பியன் இந்தியா (ஒரு வெற்றி, 2 தோல்வி) 2 புள்ளியுடன் 3-வது இடமும், 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் ஆசிய வெற்றிக்கிண்ணம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

இதில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை சர்வதேச 20 T20 போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் 13 ஆட்டங்களிலும், இலங்கை 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சு மற்றும் மத்திய வரிசையில் அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் பலமாக இருக்கின்றனர். துடுப்பாட்டம் மற்றும் சுழற்பந்து வீச்சில் இலங்கை அணி பலமாக உள்ளது.

பாகிஸ்தான் அணி சுப்பர் போரில் ஆப்கானிடம் குறைந்த வெற்றி இலக்கை எட்டுவதில் போராடியது, இது அதன் பலவீனங்களைக் காட்டுவதாக உள்ளது.

இலங்கை அணி ஆப்கானுடனான ஆரம்பப் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தபோதும் அடுத்தடுத்த போட்டிகளில் சவாலான வெற்றி இலக்குகளை எட்டியது.

பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மற்றும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க சிறப்பாக செயற்பட்டு வருவதினால் இன்றைய போட்டி இலங்கைக்கு நம்பிக்கை அளிப்பதாகவுள்ளது.

டுபாய் ஆடுகளத்தை பொருத்தவரையில் இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணிக்கே சாதகமாக உள்ளது. பனி அதிக தாக்கம் செலுத்துவது இரண்டாவது பந்துவீசும் அணிக்கு சிரமமாக இருக்கலாம். போட்டியில் நாணய சுழற்சி பெரும் தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button