உலகம்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 24 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் சரிக்கார் நகரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரொய்ட்டர்ஸ் செய்தியில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி அஷ்ரப் கானி உரையாற்றிக் கொண்டிருந்த பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் ஜனாதிபதி அஷ்ரப் கானி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பொதுக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்த போது , பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தலைநகர் காபுலில் மற்றொரு குண்டு வெடித்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மைக்காலமாக மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். 

பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்களையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button