செய்திகள்

இணையத்தில் விற்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரத்தில் தொடர்ந்தும் சிக்கும் முக்கிய புள்ளிகள்..!

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரும், ​பொலிஸ் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை இன்று (11/07) தெரிவித்தார்.

ஏற்கனவே சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய், மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர், இருதய சத்திரசிகிச்சை நிபுணர், மிகிந்தலை பிரதேச சபை பிரதி தவிசாளர், இரண்டு இரத்தினக்கல் வியாபாரிகள், கப்பல் ஒன்றின் மாலுமி, துறவி, பாடகர் ஒருவர், இரண்டு முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகள் உள்ளிட்ட 38 சந்தேகநபர்கள் கைது செய்யபப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஒருசிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 7 ஆம் திகதி கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் பிரகாரம் 15 வயதான சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்தே இந்த விவகார விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரியின் நேரடி கட்டுப்பாட்டில், அவரது ஆலோசனைக்கு அமைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்கவின் கீழ் அதன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேணுகா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணைகளுக்கு சிஐடியின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு ஊடாக டாக விசாரணைக்கு அவசியமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைத்தியர்களின் கண்காணிப்பில் உடலியல் மற்றும் மானசீக சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத்தளங்களின் ஊடாக, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button