ஆன்மீகம்

இந்தியா- குஜராத் மாநிலம்- அருள்மிகு நாகேஸ்வரர் (நாகநாதர்) திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

பெருமை மிகு துவாரகையில் கோயில் கொண்ட சிவனே
பேதலித்து நிற்போரின் மனக்கவலை நீக்கிடுவாய் ஐயா
நால் வேத நாதமாய் உறைகின்ற சிவனே
நமக்கருள வந்திடுவாய் நாகேஸ்வரநாதப் பெருமானே

பிச்சாடன வேடம் தாங்கி செருக்கறுத்த சிவனே
செருக்கற்று வாழும் வழி காட்டிடுவாய் ஐயா
ஓம் என்ற ஒலியினிலே உறைகின்ற சிவனே
நமக்கருள வந்திடுவாய் நாகேஸ்வரநாதப் பெருமானே

குஜராத் மாநிலத்தில் நின்றருளும் சிவனே
குவலயத்தில் நல்லமைதி நிலவிடவே உதவிடுவாய் ஐயா
அழகுமிகு திருக்கோயில் உள்ளுறையும் சிவனே
நமக்கருள வந்திடுவாய் நாகேஸ்வரநாதப் பெருமானே

தென் திசை நோக்கி அமர்ந்தாட்சி செய்யும் சிவனே
தெளிவான மனவுறுதி உறுதி செய்வாய் ஐயா
நாற்புறமும் அழகு மதில் கொண்டுறையும் சிவனே
நமக்கருள வந்திடுவாய் நாகேஸ்வரநாதப் பெருமானே

கிழக்கு முகக் கோபுரத்தைக் கொண்டுறையும் சிவனே
கிலேசமின்றி நிம்மதியாய் வாழச்செய்வாய் ஐயா
அருள் தந்து ஆற்றல் தந்து உள்ளமுறை சிவனே
நமக்கருள வந்திடுவாய் நாகேஸ்வரநாதப் பெருமானே

சிவராத்திரி நன்னாளில் சிறப்பு விழா காணும் சிவனே
சிந்தையிலே நீயுறைந்து நலமளிப்பாய் ஐயா
யோகநிலை திருவுருவைத் தாங்கியுறை சிவனே
நமக்கருள வந்திடுவாய் நாகேஸ்வரநாதப் பெருமானே.

 

Related Articles

Back to top button