செய்திகள்

இன்றிரவு முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு : சட்டவிதிகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை

கடந்த 3 நாட்களாக தளர்த்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு 10 மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நேற்று முன்தினம் அதிகாரை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 433 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 42,347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும்,தண்டனைச் சட்டக்கோவையின் 264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவர்கள் தொடர்பிலான குற்றம் உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் மற்றும் 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button