காலநிலைசெய்திகள்மலையகம்

இன்றும் கடும் மழை : மண்சரிவில் சிக்கி பலியான உயர்தர வகுப்பு மாணவி

நாட்டில் பல பாகங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, களனி கங்கை, ஜின் கங்கை, நில்வலவை கங்கை, அத்தனகல்ல ஒய ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளன. இதனால் இந்த ஆறுகளுக்கு அருகில் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மத்திய மலைநாட்டில் பெய்துவரும் தொடர் மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று திறக்கப்பட்டுள்ளதோடு லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 17 வயதான பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தில் காயமடைந்த இந்த மாணவியின் தாயார் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com