மலையகம்
இன்று சர்வதேச தேயிலை தினம்
இலங்கையின், மலையகத்தில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 150 வருடங்களாகின்ற நிலையில் அதனை நினைவு கூறுமுகமாக அண்மையில் நாணய குற்றியொன்று வெளியிடப்பட்ட அதேவேளை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டது.
தேயிலைக்கு வயது 150 வயதாகினாலும் , அதனை கொண்டு நடத்துவதற்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களுக்கான வயதோ 200 என்று ஆகின்ற நிலையில் அதனை நினைவுபடுத்தும் முகமாகவோ அல்லது அதனை கொண்டாடுமுகமாகவோ காத்திரமான நிகழ்வுகள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையில் இந்த முயற்சியில் இதவரையில் எந்தவொரு தரப்பினரும் முன்வராத நிலைமை வருத்தம்.
இலங்கையின் பொருளாதரத்தில் பிரதான ஏற்றுமதி பயிராக இருந்த தேயிலை உற்பத்தி இன்று பெருந்தோட்டப் பகுதிகளில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதனால், தேயிலைத் தொழிற்துறையை நம்பிவாழும் தொழிலாளர்களே பாதிப்புக்குள்ளாக வேண்டிய நிலையிலுள்ளனர். அவர்களுக்கான மாற்று வருமானம் இல்லாத நிலையில் தேயிலைத்துறை வீழ்வது வருத்தத்திற்குரியது.
சில தோட்டப்பகுதிகளில் திட்டமிட்டு தேயிலைத் தொழிற்துறையை அழிக்கும் முயற்சியில் பலதரப்பட்ட தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
பிரான்சில் 2005ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தேயிலை தினம் தொடர்பில் முன்மொழிவுகளை தேயிலை உற்பத்தி நாடுகளால் முன்மொழியப்பட்டது. இதன் போது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்ட சீனர்கள் 1938ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி முதலாவது சம்பள போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனை நினைவுப்படுத்தும் விதமாக டிசம்பர் 15ஆம் திகதி சர்வதேச தேயிலை தினமாக பிரகடனப்படுத்தலாம் என்று முடிவெடுத்தனர்.
அதன் அடிப்படையில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாவது சர்வதேச தேயிலை மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓவ்வொரு அதே தினத்தில், தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் தேயிலை தொழிலையே நம்பி வாழ்ந்த, வாழ்கின்ற மலையக மக்கள் இந்த தினம் பற்றி அறியாதவர்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.