இன்று நாடாளுமன்றில் நடந்தது என்ன? புகைப்படம் காணொளி தொகுப்பு இதோ…
இலங்கையில் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலவியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் நேற்று (14) காலை கூடிய நாடாளுமன்றம் சபாநாயகரால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (15) காலை 10 மணியளவில் நாடாளுமன்றம் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச உரையில்,“ ஜனாதிபதி, பிரதமர் என அனைத்துப் பதவிகளையும் நான் வகித்துள்ளேன். எனவே, எனக்கு பதவி முக்கியமில்லை. நாடு அபாயத்தை நோக்கி பயணிப்பதை தடுக்கவே, ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் பதவியேற்றேன்.
ஐக்கிய தேசியக்கட்சிக்கும், வெளிநாட்டு தூதரகங்களுக்கும் விசுவாசமானவராகவே சபாநாயகர் செயற்படுகின்றார். நாடாளுமன்ற வரலாற்றில் நேற்றுதான் இருண்டநாள்.” என்று ஆவேசம்பொங்க உரையாற்றினார்.
அத்துடன், எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படும் என அறிவித்த மஹிந்த, ஐக்கிய தேசியக்கட்சிமீதும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார்.
இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஐ.தே.க. எம்.பிக்களும் கருத்துகளை முன்வைத்தனர்.
பின்னர் பெரும் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் மஹிந்தவின் உரை நிறைவுக்குவந்தமையோடு, அவரின் உரைமீது நம்பிக்கையில்லை. எனவே, வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை லக்ஸ்மன் கிரியல்ல முன்வைத்தார். இதன் போது
கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அங்கு ஏற்பட்ட குழப்பம் உச்சமடைந்து கைகலப்பாக மாறியதுடன், சில உறுப்பினர்கள் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சிலர் நாடாளுமன்றத்தில் ஆயுதங்களை எடுத்து வந்ததுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், மஹிந்த அணியின் உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்பத்தையடுத்து சபாநாயகர் நாடாளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் குப்பை கூடைகளை சபாநாயகரை நோக்கி தூக்கியெறிந்ததையடுத்தே சபாநாயகர் எந்த வித அறிவிப்பையும் விடுக்காது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த மோதலின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைதியாக நாடளுமன்றத்தில் நடந்த குழப்பங்கை அவதானித்துள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சாபாநயகர் சபை அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்திருந்த போதும், சாபாநயகர் கட்சி தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் நாளை சபை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, இன்றைய தினம் ஏற்பட்ட குழப்பை நிலை தொடர்பில் ஜனாதிபதிக்கு சாபாநயகர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், விசேட பொலிஸ் அதிரடி படையினர் நாடாளுமன்ற பகுதியை சுற்றி பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு ஒரு நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளதுடன், நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன், பொது மக்களும் அரசியல் வாதிகளும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். நாளை(16) என்ன நடக்கும்?