செய்திகள்

இன்று முதல் 20 – 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய, அந்த  மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் அவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்கு மேலதிகமாக, விகாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம், வேரஹெர இராணுவ வைத்தியசாலையிலும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு இன்று ஆரம்பமாகின்ற குறித்த திட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கிளிநொச்சி  மாவட்டத்தில் இன்று முதல் இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகின்றன.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயம் உள்ளிட்ட தடுப்பூசி நிலையங்களில் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம்,  முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களில் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download