செய்திகள்

இயங்காநிலை நோக்கி நகரும் இலங்கை!

இலங்கையின் பொருளாதாரம் இயங்காநிலை நோக்கி விரைந்து நகருகிறது.எரிபொருட்கள் இல்லாததால் பொருளாதார செயற்பாடுகள் முடக்கநிலைக்கு வருகின்றன.பெரும்பாலான அரசாங்க சேவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறும் கேட்கப்படுகிறார்கள். பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் இடைநிறுத்தப்படுகின்றன.தனியார்துறை ஊழியர்களையும் பெரும்பாலும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு பணிக்குமாறு முகாமைத்துவங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை கூறுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு உணவு நெருக்கடியை மேலும் மோசமாக்கியிருக்கிறது.சுமார் 50 இலட்சம் மக்கள் உணவு நெருக்கடியினால் நேரடியாக பாதிக்கப்படப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.நாட்டின் சனத்தொகையில் 22 சதவீதமானவர்களுக்கு உணவு உதவி அவசரமாக தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டம் அறிவித்திருக்கிறது.

86 சதவீதமான குடும்பங்கள் உணவு நெருக்கடியைச் சமாளிக்க தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்திருப்பதாகவும் போசாக்கு குறைவான உணவை உட்கொள்வதாகவும் ஒரு வேளை உணவை தவிர்ப்பதாகவும் உலக உணவுத்திட்டம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

“கர்ப்பிணித் தாய்மார் தினமும் போசாக்கு நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். ஆனால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளால் போதிய போசாக்கு உணவை பெறமுடியாமல் இருக்கிறது. சில வேளை உணவை அவர்கள் தவிர்ப்பதால் தங்களினதும் பிள்ளைகளினதும் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நகரங்களில் உள்ள வறிய குடும்பங்களும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வேலை செய்பவர்களும் பெறும் வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது.

உலகளாவிய மட்டத்தில் தினமும் உணவு மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.ஆபத்தான நிலைமையைத் தவிர்க்க விரைந்து செயற்படவேண்டியிருக்கிறது” என்று ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான உலக உணவுத்திட்ட பிரதி பணிப்பாளர் அந்தியா வெப் கூறியிருக்கிறார்.

ஜூன் தொடக்கம் செப்டெம்பர் வரை 17 இலட்சம் மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளுக்காக 4 கோடி 70 இலட்சம் அமெரிக்க டொலர்கள் உதவியை சர்வதேச சமூகத்திடம் இருந்து திரட்டுவதற்கான அழைப்பை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் கடந்த 9 ஆம் திகதி விடுத்திருந்தது. இலங்கைக்காக உணவு உதவிக்கு ஐக்கிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.உணவு வகைகள் மற்றும் பொருட்கள் விநியோக சங்கிலியும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த விநியோகத்தில் ஈடுபடுகின்ற லொறிகள் போன்ற பெரிய வாகனங்களின் சாரதிகள் தங்களது சேவைகளை மீண்டும் தொடர எப்போது எரிபொருட்கள் கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துக்கிடக்கிறார்கள்.

பெரும்பாலான விற்பனை நிலையங்களில் பல அத்தியாவசியப்பொருட்கள் பெரும் தட்டுப்பாடாகவுள்ளது.இதனிடையே வர்த்தகர்கள் பதுக்கலில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது மக்கள் எதிர்நோக்கப்போகின்ற பாரதூரமான உணவு நெருக்கடிக்கு இது கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

இந்த நெருக்கடி குறித்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எச்சரிக்கை செய்கிறார்களே தவிர செயலில் எதையும் காணோம். நிலைமை மோசமடைவதை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் கடந்த வருடம் ஏப்ரில் மாதம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் இரசாயனப் பசளைகள் இறக்குமதிக்கு தடைவிதித்து விவசாயத்துறைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தவறை காலந்தாழ்த்தி ஒத்துக்கொண்டு தடையை அண்மையில் நீக்கியபோதிலும்,தேவையான பசளை வகைகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் வெளிநாட்டு செலாவணி இல்லை.அத்துடன் ரஷ்ய — உக்ரேன் போர் காரணமாக உலகளாவிய மட்டத்தில் பசளைகளின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button