...
செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு செய்தி!

2022ம் ஆண்டு நம்பிக்கை நிறைந்த ஆண்டாகத் திகழட்டும் மலையக மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு செய்தி
பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு.

மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இ.தொ.கா எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது பாடுபடும் என்பதை இப்புத்தாண்டில்  தெரிவித்துக்  கொள்ள விரும்புகின்றேன் என இ.தொ.கா. பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான, ஜீவன் தொண்டமான் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது புத்தாண்டுச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும், சவால்களை சந்திக்கின்ற போதும் அரணாகக் காத்து நின்று துயர்களையும் துடைத்து பாதுகாத்து வந்திருக்கின்றோம். இந்த வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும். இதன் காரணமாகவே, தெளிந்த சிந்தனையோடும், கொள்கைப்பற்றோடும் மக்கள் எம்பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

இன்று எம்மக்கள் அனைவருக்கும் சலுகைகள், உரிமைகள், வசதி வாய்ப்புகள் அத்தனையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியத்தாலும், தொழிற்சங்க போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

2022ம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும், மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிகாட்டும் ஆண்டாகவும் திகழவேண்டும். இம்மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம்.

புதிய ஆண்டில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.

இதேவேளை இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள், இவர்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், வாஞ்ஞைகள் இவ்வாண்டிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஆண்டு இளைஞர்களுடைய ஆண்டு. புதிய சகாப்தத்தை படைக்கப் போகும் இவ் அரசாங்கம் இளைஞர்களின் எண்ணங்களை நிறைவேற்றி நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாக இந்த ஆண்டை நாம் எதிர்பார்க்கின்றோம். 

இளைஞர்கள் மத்தியில் புதிய யுகத்தைப் படைக்கப் போவது உறுதி. வரலாற்றில் இளைஞர்கள் ஒரு போதும் தவறு இழைக்கக் கூடாது என்பதை இப்புத்தாண்டு செய்தி மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன். 
ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மலர வேண்டும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen