இராணுவத்தினருடன் இணைந்து முப்படையினர் வீதி அமைக்கும் நடவடிக்கை
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நியூவெளிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை அடுத்து, இராணுவத்தின் உதவியுடன் குறுக்கு வீதியொன்றை அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினர் முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில், தேயிலை தோட்டமொன்றின் ஊடாக, இராணுவத்தினரின் உதவியுடன் இந்த குறுக்கு வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளுக்கிணங்க, இந்த குறுக்கு வீதிக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பகுதிக்கு நேற்றைய தினம் சென்ற நாடாளுமன்ற ஆறுமுகன் தொண்டமான், முப்படை அதிகாரிகள், நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர், அம்பகமுவ பிரதேச சபை செயலாளர், தேயிலை தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.
குறுக்கு வீதியின் நிர்மாணப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதி தாழிறங்கியதையடுத்து, பயணிகள் மிக நீண்ட தூரம் நடந்து செல்லவேண்டி ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படகின்றது.