செய்திகள்மலையகம்

இலங்கைக்கு தேயிலை பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லரின் 186 ஆவது பிறந்தநாள்..

இலங்கைக்கு தேயிலை பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லரின் 186 ஆவது பிறந்தநாள், தேயிலை பயிர் முதன்முறையாக பயிரிடப்பட்ட தெல்தோட்டை, லூல் கந்தரா பகுதியில் நேற்று (29) கொண்டாடப்பட்டது.

அத்துடன், ஜேம்ஸ் டெய்லரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் முன்னெடுத்திருந்தனர்.1824 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரால் இலங்கையில் கம்பளை, சிங்ஹாபிட்டியவில் கோப்பி பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவகையான நோய்த்தாக்கத்தால் கோப்பி பயிர்செய்கை முற்றாக அழிவடைந்தது.

எனினும், கோப்பி பயிரிடப்பட்ட இடம் பாதுகாக்கப்படவில்லை. அதற்கான அடையாளம்கூட தற்போது இல்லை.இந்நிலையில் தேயிலை பயிரிடப்பட்ட இடம் பாதுகாக்கப்படுகின்றது. இது வரவேற்கப்படக்கூடிய விடயமாகும். இப்பகுதியிலேயே இலங்கையில் மிகவும் நீளமான தேயிலை தொழிற்சாலையும் அமைந்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள தோட்டங்களை அரசின் கட்டுப்பாட்டின்கீழுள்ள பெருந்தோட்டமொன்றே நிர்வகிக்கின்றது. இப்பகுதியில் உள்ள நிலங்களை விழுங்குவதற்கு பல தரப்புகளும் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றன. தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாகவே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.அதேவேளை, லூல் கந்தரா தோட்டத்துக்கு சற்று தொலைவில்தான் முல்லோயா தோட்டமும் அமைந்துள்ளது. மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் வாழ்ந்த மண் அது.

ஜேம்ஸ் டெய்லருக்கு சிலை இருக்கின்றது. அது பாதுகாக்கப்படுகின்றது. ஆனால், கோவிந்தனுக்காக அமைக்கப்பட்ட கல்லறை பராமரிப்பு நிலையில் இல்லை. அவரின் நினைவாக அப்பகுதி மக்கள் நூலகமொன்றை கோருகின்றனர். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 1867 ஆம் ஆண்டு தேயிலை பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1883 ஆம் ஆண்டுதான் தேயிலை ஏற்றுமதி ஆரம்பமானது. சிறந்த கேள்வி ஏற்பட்டதால் தேயிலை பயிர் செய்கை விஸ்தரிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் இருந்து வருகை தரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

ஆர்.சனத்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com