செய்திகள்

இலங்கையில் சீரற்ற காலநிலை 20 பேர் பலி; 44 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

மழை, வெள்ளப்பெருக்கு காற்றுடன் கூடிய தற்போதைய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 20 பேர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமற் போயுள்ளனர்.

இன்று காலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ள கூற்றுப்படி நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 946 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 419 பேர் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த பகுதிகளிலுள்ள 747 குடும்பங்களைச் சேர்ந்த 2,905 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 60 நலன்புரி மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல், காலி ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை நாட்டில் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் மேலும் 1,083 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

மழை, இடி, மின்னல், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com