செய்திகள்

இலங்கையில் தொடரும் துர்ப்பாக்கியமான வரிசை (கியூ) மரணங்கள்!

பாணந்துறை, வேகட எரிபொருள் நிலையத்தில் நேற்றையதினம் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 53 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அதேசமயம் பூகொடை பகுதியில் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக சென்ற 64 வயதான நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் பதிவான இந்த இரண்டு துர்ப்பாக்கிய மரணங்களோடு இலங்கையில்
எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருக்கிறது.
பாணந்துறை, ஹிரணையில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி, புதன்கிழமை (15) இரவு உறவினர் ஒருவருடன் வெகந்த எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வரிசையில் நின்றிருந்த போது அவருக்கு முச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உறவினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போதும் எவரும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை ஆதார வைத்தியசாலையை தொடர்பு கொண்ட போதும் அந்த நேரத்தில் வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை பாணந்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​​​அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதி புதன்கிழமை காலை 10 மணி முதல் வரிசையில் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது .

இதேவளை பூகொடையில் எரிவாயு பெற்றுக்கொள்ள சென்ற 64 வயதுடைய நபரும் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம், கொழும்பு 14 இல் வசிக்கும் 29 வயதான ஒருவர் நிட்டம்புவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், வரிசையில் நின்ற போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
இந்த மரணத்தை தொடர்ந்து ‘வரிசை’ இறப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன . இவ்வாறு உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 84 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள், இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளனர்.

இன்றும் பல கிலோமீற்றர்களுக்கு மேலாக வரிசைகள் நாடு முழுவதிலும் காணப்படுகின்றன, எரிபொருள் எரிவாயுவை பெற்றுக்கொள்ள மக்கள் மணிக்கணக்கில் சில சந்தர்ப்பங்களில் சில நாட்கணக்கில் காத்திருக்கின்றனர். இந்த துயரங்களுக்கும் காத்திருப்புக்கும் எப்போது முடிவு என்பதே ஒட்டு மொத்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Articles

Back to top button