விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்தகுதி மேம்பாட்டு முகாமையாளராக க்ரான்ட் லூடென் தெரிவு.

இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்தகுதி மேம்பாட்டு முகாமையாளராக க்ரான்ட் லூடென் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வலிமை மற்றும் உடற்தகுதி மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவரான லூடென், இலங்கை கிரிக்கெட் அணியின் உயர் அடுக்கு வீரர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்.

அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினது ஒட்டுமொத்த கிரிக்கட் வலிமை மற்றும் உடற்தகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு பொறுப்பாக இருப்பார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் இணைவதற்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின்கீழ் 2014இலிலிருந்து 2019வரை வலிமை மற்றும் உடற்தகுதி மேம்பாட்டு அதிகாரியாகவும் களத்தடுப்பு பயிற்றுநராகவும் லூடென் பணியாற்றியிருந்தார். அதற்கு முன்னர் பங்களாதேஷில் 2008 முதல் 2013வரை வலிமை மற்றும் உடற்தகுதி மேம்பாட்டுப் பயிற்றுனராக கடமையாற்றியிருந்தார்.

தென் ஆபிரிக்க முதல்தர கட்டமைப்பில் நஷுவா டைட்டன் கிரிக்கெட் அணிக்கும் பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் டாக்கா க்ளடியெட்டர்ஸ் அணிக்கும் வலிமை மற்றும் உடற்தகுதி மேம்பாட்டுப் பயிற்றுநராகவும் லூடென் செயற்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை மற்றும் உடற்பயிற்சி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ள லூடென், கிரிக்கெட் அப்ரிக்காவின் (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) நிலை 3 கிரிக்கெட் பயிற்றநர் சான்றிதழையும் கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் இருந்தவாறு லூடென் செயற்படுவார்.

Related Articles

Back to top button