இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர்கள் கைது
அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவாளரின் வர்த்தக நிலையத்தைத் தாக்கிய குற்றச்சாட்டில், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்தனர்.
மாகாண சபை உறுப்பினர்கள் பி.சக்திவேல், பிலிப் குமார், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மலர் வாசகம் மற்றும் எஸ்.பாரதிதாசன் ஆகிய நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றும் திட்டத்தை எதிர்த்து, கடந்த 26ஆம் திகதி ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ்வார்ப்பட்டத்தின்போது, அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி நால்வரும், இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.