உலகம்

இழுபறியில் காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு

இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கான தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்தில் பங்கேற்காது சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர்  வெளிநடப்பு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் கட்சியின் தலைவரை தெரிவு செய்யும் 5 குழுக்களின் ஆலோசனையில் பங்கேற்காது புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்தில் தானும் ராகுல்காந்தியும் பங்கேற்காது இருப்பதே சரியெனவும் இது தொடர்பில் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் சோனியாகாந்தி கருத்து தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 2 மாதங்களுக்கு பின்னர் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நோக்கில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று காலை கூடியிருந்தது.

இந்த கூட்டத்தில் அடுத்த தலைவர் தெரிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் செயற்குழு உறுப்பினர்கள் மாத்திரம் கூடி தலைவரை தெரிவு செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசிக்க வேண்டும் என ராகுல் காந்தி ஏற்கனவே  அறிவுறுத்தியுள்ளார்.

இதன்பிரகாரம், அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு செயற்குழுக் கூட்ட ஆலோசனை நிறைவடைந்த பின்னர் நிர்வாகிகள் 5 குழுவாக பிரிந்து தனித்தனியாக விவாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மொத்த நடைமுறையும் நிறைவடைந்து புதிய தலைவர் தெரிவு செய்யப்பட 4 நாட்கள் வரை ஆகலாம் என இந்திய தகவல்கள் கூறுகின்றன.

தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 59 வயதான முகுல் வாஸ்னிக் தெரிவாக அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

134 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட காங்கிரஸுக்கு, ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்தா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே அதிக காலம் தலைவராக இருந்துள்ளனர்.

Related Articles

Back to top button