உலகம்செய்திகள்

உலகில் 18.38 கோடியைத் தாண்டியது: 39.79 லட்சம் பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கெனவே இருந்த கொரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் பி.1.1.7 வகை கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் அதிகரித்து, பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியது.

இந்நிலையில், உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.38 கோடியை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 183,867,919 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16.82 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளதுடன் 39.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1.15 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கொரோனா 2ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ளபோதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒரு சில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அந்நாட்டில் 3.45 கோடிக்கும் அதிகமானோர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு, 6 லட்சத்து 21 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தபடியாக அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, அதிகம் பேரை பலி கொடுத்த நாடு இந்தியா. அங்கு 3 கோடியே 5 லட்சத்து 2 ஆயிரத்து 362 பேருக்கு இந்த நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேஸிலில் ஒரு கோடியே 86 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5 லட்சத்து 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 4வது இடத்தில் உள்ள பிரான்ஸில் 57 லட்சத்து 80 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

55 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள ரஷ்யாவில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button