செய்திகள்

ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது அவர்களை பாதுகாக்குமாறு பிரதமர் வேண்டுகோள்

ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை ஆடை பிராண்டு சங்கம் (SLABA) மற்றும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA) ஆகியன எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வங்கிக் கடன் நிவாரணம் பெற்றுக்கொள்ளல், ஆடை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றல், கொவிட் வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆடை விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி பெறல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி செயற்பாட்டிற்காக தனியான அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை ஆடை பிராண்டு சங்கத்தின் தலைவர் லலந்த வதுதுர இதன்போது பிரதமருக்கு தமது சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட்-19 உலகளாவிய தொற்று நிலைமை காரணமாக இதுவரை சுமார் 24 மாதக் காலங்களாக தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நிதி அமைச்சின் ஊடாக அவசர நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊழியர்களை தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளமையால் அவர்களை பணிநீக்கம் செய்வதை தவிர மாற்று வழி இல்லை எனத் தெரிவித்த இச்சங்கங்களின் பிரதிநிதிகள் அவ்வாறு ஊழியர்களை நீக்குவதும் கடினமானதொரு செயற்பாடாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

Back to top button