செய்திகள்

ஊவா மாகாணத்தில் பிராந்திய கற்றல் வள மையங்களை நிறுவும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய இணையவழி தொலைதூர கல்விக்கான வசதிகளற்ற பாடசாலை மாணவர்களுக்குப் பிராந்திய கற்றல் வள மையங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டத்தை ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான முதல்கட்ட கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஊவா மாகாண சபை கேப்போர்கூடத்தில் இடம்பெற்றது.

சிக்னல் கவரேஜ் இல்லாத, இணைய வசதிகள் அற்ற, கணனி உபகரணங்கள் இல்லாததன் காரணமாக இணையவழி தொலைதூர கல்வியுடன் இணையமுடியாத மாணவர்களுக்காக, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிச் சிறு குழுக்களாக இணைந்து கற்பிக்கக்கூடிய மையங்களைக் கிராம மட்டங்களில் நிறுவுவது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதற்கமைய குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான பௌதீகவளங்கள் காணப்படும் பாடசாலைகள், விகாரைகள் போன்ற இடங்களைத் தேவைக்கேற்ப தெரிவு செய்து, கற்றல் வள மையங்களை எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டமாகக் குறைந்தபட்சம் அணைத்து வலயக் கல்வி பிரிவுகளிலும் ஒரு கற்றல் வள மையங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதங்கமகே, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன் டெனிபிடிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் திஸாநாயக்க, பிரதமரின் இனைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் சார்பாக ஹல்தமுல்லை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார் மற்றும் ஏ. அரவிந்த குமார், பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தயானந்த ரத்நாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், Zoom தொழிநுட்பத்தின் ஊடாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Back to top button