கல்விசெய்திகள்பதுளைமலையகம்

ஊவா மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தடங்கலின்றி முன்னெடுத்தல் தொடர்பில் ஆளுனர் தலைமையில் இன்று விஷேட கலந்துரையாடல்!

ஊவா மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தடங்கலின்றி முன்னெடுத்தல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலைகளை முழுமையாகத் திறத்தல், விடுபட்ட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், ‘விதுபிமென்-கோவிபிமக்’ திட்டத்தின் முன்னேற்றம், வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல் மற்றும் முதலாம் ஆண்டுக்கு புதிய மாணவர்களைச் சேர்த்தால் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை, போக்குவரத்து வசதிகள் உட்பட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாடசாலை நிர்வாகத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கல்வி அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம், மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளும் கிழமையின் ஐந்து நாட்களும் முன்னெடுக்கப்படுவதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்படுகிற போதும், போக்குவரத்து வசதிகள் சீரின்மை மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களின் பாரிய அதிகரிப்பு காரணங்களினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டுவருவதாகவும் வலையக் கல்விப் பணிப்பாளர்களினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த பிரச்சினையை உடனடியாக மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற ஆளுநர், இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கத்துடன் கலந்துரையாடி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்தன உட்பட அனைத்து வலையக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button