அரசியல்செய்திகள்

எனது சகோதரனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் – மஹிந்த

வெறுப்பின் மூலம் கிடைக்கும் எந்தவொரு விடயமும் தற்போதைய அரசாங்கத்தினுள் தனக்கு இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அனைவரும் ஜாதி, மதங்களுக்கு உட்படாமல் ஒன்றாக இருக்கக்கூடிய கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு காரணமாக இருந்த பெஷில் ராஜபக்ஷவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நாள் வராமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் செயற்பட்டதாகவும் ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிற்கு வராமல் செய்வதற்காக அரசியலமைப்பை மாற்றியதாகவும் அவர் இதன்போது கூறினார். 

அவர்கள் அவ்வாறான விடயங்களை செய்து தமது சுதந்திரத்தை பறித்தாகவும், நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சுதந்திரத்தை அர்ப்பணிப்பு செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். 

வெறுப்பை முன்னெடுத்து செல்ல அரசியலிற்கு வருவதில்லை எனவும் தன்னை நேசிக்கும் மக்களிற்காக மாத்திரமே அரசியலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்டதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் சிறிகொத்தவின் நிழல் கட்சியின் மீது விழுந்ததினால் நாட்டை நேசிப்பவர்களுக்கு அந்த இடத்தில் இருக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் குப்பை கூலங்களில் துர்நாற்றம் வீசும் போது மக்களுக்கு தங்களை நினைவு வந்ததாகவும், கொச்சிக்கடையில் இருந்து மட்டக்களப்பு வரையில் குண்டுகள் வெடித்த போது மக்களுக்கு தங்களை நினைவு கூர்ந்ததாகவும் தெரிவித்த அவர், இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவானதாகவும் தெரிவித்துள்ளார். 

எந்தவொரு மதத்தினருக்கும் தனது வணக்கஸ்தலங்களுக்கு செல்லக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை என்று எண்ணக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

365 நாட்களும் நாட்டை பாதுகாக்க கூடிய ஒருவர் நாட்டிற்கு தேவை எனவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நான் செய்வேன் என்று செல்லும் ஒருவர் அல்லாமல் செய்து காட்டிய ஒருவரை கொண்டு வரவேண்டும் எனவும், மக்களை ஏமாற்றாத ஒருவர் வேட்பாளராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எனவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
கோட்டாபய எப்போது தன்னை ஜனாதிபதியாக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை எனவும் உங்களை வலுப்படுத்துவதற்காக அன்றி கோட்டாவை வலுப்படுத்தவதற்காக அவரை நியமிக்கவில்லை எனவும் அவர் இதன்போது கூறினார்.

Related Articles

Back to top button
image download