உலகம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்தது

மோசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களில் 38 பேர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் இந்தியாவின் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர்.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு உச்சக்கட்டப் போர் வெடித்தபோது அங்குள்ள மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் 20-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ளது.

வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் ஈராக் சென்று கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வார் என சுஷ்மா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டி.என்.ஏ. மாதிரி 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ள ஒரு இந்தியரை தவிர மீதமுள்ள 38 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று ஈராக் நாட்டில் உள்ள மோசூல் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்து பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உடல்கள் இந்தியாவுக்கு சொந்தமான தனி விமானத்தில் ஏற்றப்பட்டன. உடல்களுடன் அந்த விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தது.

இறந்தவர்களில் 27 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உடல்களை ஏற்றிவரும் விமானம் முதலில் பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரஸ் நகரில் இன்று பிற்பகல் தரையிறங்கியது. அம்மாநிலத்தை சேர்ந்த 27 பேரின் உடல்களும், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தங்களது குடும்பங்களை காப்பாற்ற வெளிநாட்டுக்கு சென்று பயங்கரவாதத்துக்கு பலியானவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் பெற்றுக் கொண்டனர்.

மற்ற 7 பேரின் உடல்களும் இன்று மாலைக்குள் கொல்கத்தா மற்றும் பாட்னா விமான நிலையங்களில் அவர்களது உறவினர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button