செய்திகள்

“ஒருமீ” மலையக சிவில் அமைப்புகள் ஒன்றியம் இன்று பிரதமரிடம் கையளித்த கடிதம்!

“ஒருமீ” சிவில் அமைப்புகள் ஒன்றியம் பிரதமரிடம் கையளித்த கடிதம்!

கௌரவ பிரதம மந்திரி அவர்கள்
இலங்கை நாடாளுமன்றம்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
இலங்கை.

கௌரவ பிரதம மந்திரி அவர்களுக்கு,

பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன கூட்டு ஒப்பந்தம் தொடர்பில்,

நாட்டின் ஜனநாயகம் உறுதிசெய்யப்பட்டு மீண்டும் தாங்கள் பிரதமராக பதவியேற்று அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளீர்கள். இந்நிலையில் ஏழ்மையில் வாடும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளத்தினை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மலையகத்திலும், தலைநகரிலும் முன்னெடுத்துவருகின்றனர். ஆனப்போதும் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு இணக்கம் தெரிவிக்காததால் இந்தப் பிரச்சினை தொடர்வதை தாங்கள் அறிவீர்கள். தொழிலார்களின் ஜனநாயகம் காக்கப்படவும், தொழிலாளர் குடும்பங்களின் ஏழ்மை நிலைமை ஓரளவுக்கேனும் குறைக்கப்படவும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ரூபா 1000மாக அதிகரிக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுகின்றோம்.

நாட்டுக்கு அந்தியச் செலாவணியை ஈட்டித்தரும் பெரும் தொழிற்படையாக உழைப்பதோடு அடிப்படை பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாக பெருந்தோட்ட மக்களே உள்ளனர். அத்தோடு இலங்கைத் தேயிலை (சிலோன் ரீ) எனும் கௌரவத்தை நாட்டிற்கு ஈட்டிக்கொடுத்து, இலங்கையின் புகழை உலகின் முன் கொண்டுசென்ற பெருமையும் கௌவரமும் இந்த மக்களையே சாரும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். இதனால் இம்மக்களின் அடிப்படை உரிமைசார் சம்பளப் பிரச்சினையில் தலையிடும் உரிமை அரசாங்கத்திற்கும் உள்ளது.

மேலும், ஆட்சியாளர்களின் தலையீட்டினாலே கடந்த காலங்களிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பிற்காகப் போராட்டம் நடத்திய போது அன்றைய ஜனாதிபதி கௌரவ ஜே. ஆர் ஜயவர்த்தன தலையிட்டு சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்ததோடு ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சம அளவிலான சம்பளத்தையும் பெற்றுக்கொடுத்து தொழிலாளர்களின் சம சம்பள உரிமைக்கு மதிப்பளித்தார்.

அதேபோன்று கௌவர ஆர். பிரேமதாச அவர்கள் 1993ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தலையிட்டு அன்று நாட்சம்பளம் ரூபா 53.32 இருந்தை ரூபா 72.24 ஆக உயர்த்தினார். தொடர்ந்தும் 1998 ரூபா 83.00 ஆக இருந்த நாட் சம்பளத்தை ரூபா 95.00 ஆக உயர்த்தியவர் 2015இல் நல்லாட்சி உருவாவதற்கு தாங்களுக்கு துணையாக நின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா குமாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழ்நிலையில் கடந்த காலத்தை போன்று அரச தலையீடு மிக முக்கியமானது என நாம் கருதுகின்றோம். மேலும், தாங்கள் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் தங்களது கட்சி சார் தொழிற்சங்கமும் கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிடும் தரப்பாக உள்ள நிலையிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவு வாக்கு வங்கி தங்களுக்கே இருப்பதாலும் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்கும் பெரும் கடப்பாடு தங்களுக்கே இருக்கிறது.

தங்களது கட்சிசார் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்ட கைத்தொழில்துறை ராஜாங்க அமைச்சருமான கௌரவ வடிவேல் சுரேஸ் அவர்கள் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை காரணம் காட்டியே மாற்று தரப்பினர் பக்கம் சென்றாலும் இவ்விடயத்தில் தாங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தங்களின் தலைமையை ஏற்றபோது அவரிடமே தங்களின் கட்சிசார் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொறுப்பினை கையளித்துள்ளீர்கள். இது நீங்கள் தொழிலாளர் சக்தியை அறிந்து வைத்து கொண்டுள்ளமையை உணர்த்துகின்றது. இதுவும் சம்பளப் பிரச்சினையை தீர்க்க வழிசமைக்கும் எனவும் நாம் நினைக்கின்றோம்.

மேலும், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த போதும் ஒன்றரை வருடங்கள் கடந்து 2016 ஒக்டோபர் மாதமே மீண்டும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
இக்காலப்பகுதியில் ஆட்சியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் நீங்கள் உரையாற்றிய போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 1000 கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டீர்கள். அதே காலப்பகுதியில் கௌவரவ ஆறுமுகம் தொண்மான் அவர்களும் இதே தொகையினை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தினார். ஆனால், தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

தற்போதுகூட ஒப்பந்தம் நிறைவடைந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. கடந்த முறை ஒன்றரை வருடம் கடந்ததாலும் தற்பொழுது மூன்று மாதங்கள் கடந்து விட்டதாலும் ஒரு ஒப்பந்த காலத்திற்கான சம்பள அதிகரிப்பு கிடைக்காத நிலையில், நிலுவை சம்பளமும் கொடுக்காத சூழ்நிலையில் தொழில் தருனர்களால் முன்வைக்கப்பட்டுள்ள தொகையில் எந்த நீதியும் இல்லை என்பதோடு, அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எனவே, 2016ஆம் ஆண்டு ரூபா 1000 கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் தொழில்தருனர்களின் திட்டமிட்ட சம்பள அநீதியை ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ, இடமளிக்கவோ வேண்டாம்.

தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூபா 1000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியினரும் அதேகருத்தை முன்வைத்தனர்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் ரூபா 1000 சம்பள அதிகரிப்பை கோரி மலையக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக கைச்சாத்திடும் கௌரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் 19ஆம் திகதி( 2018.12.19) ‘ஜனாதிபதி கம்பனிகளுடன் பேசி நல்ல முடிவை அறிவிப்பார், ஆகவே போராட்டத்தை கைவிடுங்கள்’ என கேட்டுக்கொண்டதிற்கு இணங்க தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

எனவே, தாங்களும் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவரும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆர்வமாக உள்ளதால் மூவரும் கூட்டாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ரூபா 1000 பெற்றுக்கொடுக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கியமாக தொழிலார்கள் சார்பாக செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? என்பதை அறிந்துகொள்ளும் உரிமை தொழிலாளர்களுக்கு உள்ளது. ஆனால், இதுவரை காலமும் அது மூடிமறைக்கப்பட்டமையே வரலாறு. கடந்த காலங்களில் ஒப்பந்த சரத்துகள் மீறப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். என்பதையும் தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

ஆதலால் ஒப்பந்தந்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கத்தை தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அவர்களுக்கு வெளிப்படுத்தி, கருத்தறிதலுக்கான போதுமான காலம் கொடுக்கப்பட்டு அதன் பின்னரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதனையும் மீறி ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுமாயின் அது தொழிலாளர்களின் உரிமை மீறலாகவும், அடிமை நிலை சிந்தனை மனபான்மையாகவும், ஜனநாயகத்தை மிதிக்கும் செயலாகவுமே கருதப்படும். ஜனநாயக வெற்றியை பெற்று ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கும் நீங்களும், உங்கள் அரசும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாத்து மலையக தொழிலாளர் சமூகத்தின் அமைதியான வாழ்விற்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Related Articles

40 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button