ஓரங்கட்டப்பட்ட “ஆட்டுக்கல்”

uthavum karangal

ஆட்டுக்கல் அல்லது ஆட்டுரல் என்பது கல்லினால் செய்யப்பட்ட மாவு அரைப்பதற்கு உதவக்கூடிய கருவியாகும்.இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய தானியத்தைப் போட்டு குழவியைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் தானியம் அரைபடும்.

இது பெரும்பாலும் வடை, இட்லி, தோசை போன்ற உணவு பண்டங்களைச் செய்வதற்குத் தேவைபடும் அரிசி, உளுந்து மா போன்ற பொருட்களை அரைக்கப் பயன்படுகிறது.

தமிழர் பாரம்பரியத்துடன் தொடர்புபட்ட இந்த கருவி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் எமது கமராவில் பதிவானது.

இந்த ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது அல்லது அரைப்பதென்பது தனி கலை.
பெண்களே இந்த கருவியை அதிகமாக பயன்படுத்துவார்கள்.இவ்வாறு மாவரைக்கும் போது பக்கத்து வீட்டில் உள்ள சகோதரிகளும் உதவிக்கு வருவார்கள்.ஆட்டுக்கல் இல்லாதவர்கள் லயத்தை விட்டு லயம் வந்து மாவாட்டி செல்வார்கள்.
இவ்வாறு வருபவர்கள் ஒருவரை ஒருவர் உறவுச்சொல்லி அழைத்து நையாண்டி பண்ணி பேசுவது சுவாரஸ்யமானது.

அத்தோடு ஊர் கிசுகிசுக்களும் மாவுடன் சேர்ந்து அரைபடும் தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் காலங்களில் பெண்களுக்கு இது நல்ல பொழுதுபோக்காகவும் உடற்பயிற்சியாகவும் இருந்தது

மறுநாள் ஆட்டுக்கல் உள்ள வீடு தேடி பார்சல்கள் பத்திரமாக வரும்.
என்னதான் கோடிருபாய் கொடுத்தாலும் இந்த ருசிக்கு ஈடாகாது.

இப்படி எமது வாழ்வியலோடு கலந்த
ஆட்டுக்கல் மின்சார ஆட்டுக்கல்
வந்த பின்பு இதன் பயன்பாடு மட்டுமல்ல நம் பன்பாடும் குன்றிவிட்டது.

ஆட்டுக்கல், திருகைக்கல், அம்மி,
உரல், உலக்கை போன்ற எமது சமையலுக்கு தேவையான இந்த பொருட்கள் மலையக தமிழர்களின் மரபுரிமை சொத்துக்களாகும்.

ஆக்கம் – (அ.ரெ.அருட்செல்வம்)

தொடர்புடைய செய்திகள்