செய்திகள்

கடல்வாழ் உயிரினங்களின் உடல்கள் இன்றும் கரையொதுங்கின

யாழ். ஊர்காவற்றுறை – சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலமொன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. சுமார் 20 அடி நீளமுள்ள திமிங்கிலம் இன்று காலை கரையொதுங்கியிருந்துள்ளதுடன் அப்பகுதி மக்கள் கடற்றொழில் திணைக்களத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று காலை ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் கடலாமை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் மன்னார், வங்காலை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இதனுடையே, புத்தளம் – முந்தல் – சின்னப்பாடு கடற்கரையோரத்தில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நேற்று மாலை கரையொதுங்கிய சுமார் 3 அடி நீளமுடைய கடலாமையின் சில உறுப்புகள் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முந்தல் பகுதியில் இதுவரை உயிரிழந்த நான்கு கடலாமைகளும் டொல்பின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில், இதுவரை கரை ஒதுங்கிய 31 க்கும் மேற்பட்ட கடலாமைகள், 5 டொல்பின் மீன்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

இவை பதிவான எண்ணிக்கை மட்டுமே என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக காலி முகத்திடல், கொள்ளுபிட்டி, தெஹிவளை, சிலாபம், உடப்பு, உனுப்பிட்டிய பாரிபாடு, களுத்துறை, அளுத்கம, களுத்துறை வடக்கு ஆகிய கரையோரங்களில் இவற்றின் உடல்கள் ஆகிய பகுதிகளில் இவை கரையொதுங்கியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் குறிப்பாக இலங்கைக்கே உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக அத்திணைக்களம் தெரிவித்தது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏர்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றனவா என அவ்வந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button