...
செய்திகள்

கண்டி- உடிஸ்பத்து அருள்மிகு கதிரேசன் திருக்கோயில் ..

எழில் பொங்கும் மலையகத்தில் இருந்தருளும் கதிரேசா
எத்திசையும் உன்னருளே நிலவிடட்டும் திருக்குமரா
மனவலிமை தந்தெமக்கு வாழவழி காட்டி விட்டு 
மானமுடன் தலைநிமிர்ந்து வாழவரம் தாருமய்யா
கண்டி மாவட்டத்தில் கோயில் கொண்ட கதிரேசா
கவலையின்றி வாழும் வழி உறுதி செய்வாய் திருமுருகா 
உள்ளமெல்லாம் உன்நாமம் நிறைந்திருக்கச் செய்து விட்டு 
உத்தமனாய் வாழ நல்ல வழியைத் தாருமய்யா
உடிஸ்பத்து நல்லூரில் வீற்றருளும் கதிரேசா
உரிமைகளை உறுதிசெய்து பலம்தருவாய் வேல்முருகா 
சுற்றிவரும் கொடுவினைகள் எட்டியே விலக்கி விட்டு 
ஏற்ற துணையிருந்து எமைக் காக்க வாருமய்யா
அழகு மலைக் குன்றினிலே இருந்தருளும் கதிரேசா
அச்சம் அகற்றி ஆற்றலையும் தந்திடய்யா மால்மருகா
பகையற்ற மனத்தினராய் வாழ்வில் மேல் உயர்வதற்கு
வகைசெய்து ஆதரிக்க விரைந்து நீ வாருமய்யா
அறிவுதந்து அரவணைக்கும் ஐயனே கதிரேசா
திருவருளை நாடிநிற்போர் நலன் காப்பாய் சண்முகனே
மகிழ்ச்சி பொங்க, வலிமையுடன் இந்நாட்டில் நாம் வாழ
மனம் கொண்டு காப்பளிக்க தவறாது வாருமய்யா
தமிழ் காத்து வளமளிக்கும் தலைமகனே கதிரேசா
தரணியிலே நம் பெருமை ஒளிரச் செய்வாய் சரவணனே
தடுமாறும் மனநிலையை அடியோடு அகற்றிவிட்டு 
தலைநிமிர்ந்து முன் செல்ல வழிகாட்ட வாருமய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen