ஆன்மீகம்

கண்டி கட்டுக்கலை – அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம்- கண்டி மாநகர் கட்டுக்கலை- அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

கண்டி மாநகரினிலே கோயில் கொண்ட விநாயகரே
கண்ணின் மணியானவரே காத்தருள வாருமைய்யா
கட்டுக்கலை தனிலமர்ந்து திருக்காட்சி தருபவரே
கந்தனுக்கு மூத்தவரே உம்கருணை வேண்டுமைய்யா

சக்தியம்மை திருமகனே சங்கரனின் மூத்தவரே
சங்கடங்கள் வரும் வேளை தடை செய்ய வாருமைய்யா
சண்முகனாம் உம் தம்பி வேல் கொண்டு வந்திருந்து
சக்தியற்ற மக்களுக்கு துணையிருக்க வேண்டுமைய்யா

வரும் துன்பம் போக்கிவிடும் வல்ல விநாயகரே
வந்த துன்பம் போக்கிவிட விரைந்து வாருமைய்யா
வலுவிழந்து நிற்கும் மக்கள் வளமுற்றுவாழ உந்தன்
வல்ல அருளெமக்கு காப்பளிக்க வேண்டுமைய்யா

தந்தை தாய் பெரியரென்று தரணிக்குச் சொன்னவரே
தறிகெட்டுத் திரிகின்ற மக்களை திருத்திட வாருமைய்யா
தண்மதியைத் தலையின்மேல் கொண்டவராம் உம் தந்தை
தரணிக்கு அன்னவரின் கருணையும் வேண்டுமைய்யா

எங்கும் எதிலும் இருந்தருளும் விநாயகரே
எத்திக்கும் நன்மைகளை அளித்திடவே வாருமைய்யா
உடல் சோர்வு உளச் சோர்வு அண்டாது காத்துவிட்டு
நிம்மதியாய் வாழும் நிலை எமக்கென்றும் வேண்டுமைய்யா

மலை சூழ்ந்த திருவிடத்தில் மாசறுக்க அமர்ந்தவரே
மலைத்து நிற்கும் எங்களுக்கு வழித்துணையாய் வாருமைய்யா
மன்னவனே, திருமகனே, மங்களத்தின் உறைவிடமே
மதமறுத்து அருளளித்து மாட்சிபெறக் கருணை செய்ய வேண்டுமைய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button