செய்திகள்

கதிர்காமம்- அருள்மிகு தெய்வானை அம்மன் திருக்கோயில்..

கந்தனுறை திருத்தலத்தில் கோயில் கொண்ட தாயே
காவல் செய்து அரவணைத்து நிம்மதியைத் தருவாய்
சிந்தையிலே உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள் 
சீர்மை நிறைவாழ்வதனை எமக்களிப்பாய் அம்மா 
கதிர்காமத் திருத்தலத்தில் அமர்ந்தருளும் தாயே
மாண்புடனே நாம் வாழ வழியமைத்துத் தருவாய்
நம்பியுந்தன் தாள் பணிந்து வணங்குகின்றோம் நாங்கள் 
தலைதாழா வாழ்வதனை எமக்களிப்பாய் அம்மா 
மாணிக்க கங்கைகரை குடிகொண்ட தாயே
கந்தனது ஆசியையும் பெற்றெமக்கு அளிப்பாய்
இதயத்தில் உனையிருத்தி தொழுகின்றோம் நாங்கள் 
என்றுமெம்முடனிருந்து காத்தருள்வாய் அம்மா 
தமிழ்க்கடவுள் கந்தனை மணந்திட்ட தாயே
தமிழ்க்குலத்தின் தாயாக இருந்தெம்மைக் காப்பாய்
தளர்வில்லா நல்வாழ்வை நாடுகின்றோம் நாங்கள் 
தாள் பணியும் எங்களை நீ வாழவைப்பாய் அம்மா 
ஆதிசிவன் மருமகளாய் வந்தவளே தாயே
ஆறுதலை எமக்களிக்க கருணையை நீ தருவாய்
கதிர்காமத் திருத்தலத்தில் நீயிருப்பதாலே நாங்கள்
கவலையற்று இருக்கும் நிலை எமக்கருள்வாய் அம்மா 
தெய்வானை திருமகளாய்ப் பெயர் கொண்ட தாயே
தேடியுந்தன் அடிபணியும் எம்மை நீ காப்பாய்
மாண்புடனே தலை நிமிர்ந்து நாம்வாழ வேண்டும் 
மாமணியே, தாயவளே அருள் தருவாய் அம்மா. 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button