செய்திகள்

கதிர்காமம்- கந்தன் திருக்கோயில்..

 அறங்காத்து மறமழிக்க அவதரிக்கும் அண்ணலே
அல்லலுற்று அவதியுறும் எமைப் பாராதிருப்பதேன்
கொடும்பகையும், பயநினைவும் கூடி வந்து வாட்டுது
கொண்ட பொருள் குடியிருப்பு எல்லாம் பறிபோகுது
வருந்தியுழைத்து சேர்த்த வளங்கள் எல்லாம் போகுது
வருந்துயர்கள் போக்கிவிட வழியெதுவும் காணோமே.. 
ஆதி சிவன் திருக்கோயில் கோபுரங்கள் பிளக்குது
அழகு திருமுருகா உந்தன் ஆலயங்கள் அழியுது
வினைதீர்க்கும் உன்னண்ணன் கோயில்களும் சிதையுது 
பெற்ற அன்னை சக்தியவள் கருவறையும் கலங்குது.. 
இந்த நிலை என்றொழிந்து அமைதி வந்து சேருமோ
ஆண்டவனே ஏனிந்த அவலநிலை சொல்லய்யா
பிறந்த மண்ணில் அந்நியர்போல் அவதியுற்று வாழ்ந்திடும் 
சுகமில்லா இவ்வாழ்வும் உனது பரிசாகுமோ.. 
வேதனைகள் இனி வேண்டாம் வேல்தாங்கும் முருகனே
வீணர்களின் கொட்டமதை அடக்கியெமைக் காத்திடு
பாடுபட்டு பசியாறும் பாமரர்கள் யாவரும்
பசிகொண்டு துடிதுடித்திருப்பதுதான் நீதியோ
கதிர்காமத் திருத்தலத்தில் பெட்டகத்தில் பதுங்கி நீ இருப்பதனால்
இந்த அவலநிலை அறியாயோ.. 
பெட்டகத்தில் ஒழிந்திருக்கும் கந்தா நீ எழுந்திரு
பொங்கிவரும் கொடுமைகளை வேரோடு அகற்றிடு
சத்தியமாய் உனைநம்பித் தாள்பணியும் பக்தர்கள்
பரிதவிக்கும் நிலையகற்றி 
நிம்மதியாய் வாழவிடு. 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button