செய்திகள்நுவரெலியாமலையகம்

கந்தப்பளை – பார்க் தோட்டத்தின் எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தின் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம் போராட்டத்தை கைவிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பார்க் தோட்ட முகாமையாளருக்கு எதிராக கட்சி பேதமின்றி, உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பார்க் பெருந்தோட்டப் பகுதியில் 305 வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை பெற்றுக்கொடுக்க தோட்ட முகாமையாளர் மறுப்பு தெரிவித்திருந்ததுடன், பெருந்தோட்ட மக்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் முகாமையாளர் நேற்றைய தினம் பேசியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டிருந்ததுடன், இன்று (18.01.2021) பிற்பகல் போராட்டம் வெற்றியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

குறித்த முகாமையாளரின் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு ஒரு நாள் காலவகாசம் கோரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.
அதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட கம்பனி உறுதியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, எட்டப்பட்ட தீர்மானம் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடிமைகளாக வாழ முடியாது என கூறியுள்ள ரமேஷ்வரன், பெருந்தோட்ட பகுதிகள் தமக்கு சொந்தமான காணிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தாமே இந்த காணிகளின் உரிமையாளர்கள் என தெரிவித்த அவர், கம்பனிகளின் முகாமையாளர்கள் வந்தேறிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
2005ம் அண்டு தமது பெருந்தோட்ட பகுதிக்கு வருகைத் தந்த தோட்ட முகாமையாளர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வழமையான நடைமுறைகள் அனைத்தையும் மாற்றியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது நடவடிக்கை காரணமாக 300 வரையான தொழிலாளர்கள் பணிப் புரிந்த இந்த பகுதியில், தற்போது சுமார் 150 வரையான தொழிலாளர்களே பணிப் புரிந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களை அச்சுறுத்தியே அவர் தனது பணிகளை செய்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கூட்டு உடன்படிக்கையிலுள்ள அனைத்து சலுகைகளையும் குறித்த முகாமையாளர் இல்லாது செய்துள்ளதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இவ்வாறான தோட்ட அதிகாரிகளை பணிக்கு அமர்த்த வேண்டாம் என பார்க் பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கந்தப்பனை பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
(செய்தி – க.கிஷாந்தன்)

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com