செய்திகள்நுவரெலியாமலையகம்

கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும் தோட்ட முகாமைத்துவத்திற்குமிடையே முறுகல்.

நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வீடுகளை அமைப்பதற்கு காணியை வழங்க மறுப்பு தெரிவித்த கந்தப்பளை பார்க் தோட்ட முகாமையாளர், தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தையினால் பேசியுள்ளதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோட்ட முகாமையாளரின் வீட்டை தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 305 வீடுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த காணிகளை வழங்க தோட்ட முகாமையாளர் இழுத்தடிப்புக்களை மேற்கொண்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது, தோட்ட முகாமையாளர் பெருந்தோட்ட மக்களை தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய முகாமையாளர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், வீடுகளை அமைக்க காணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரி அங்கு மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com