உலகம்செய்திகள்

கனடாவில் உயிர் பலி வாங்கும் கடும் வெப்பம் : 130 பேர் பலி

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

கனடாவை பாதித்துள்ள கடும் உஷ்ணம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்றையதினம் வரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் கூடுதலானோர் முதியவர்கள் என கனட பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்றையதினம் கனடாவின் வெப்பநிலை 49.6 பாகை செல்சியசாக அதிகரித்திருந்தது. இது இதுவரை காலத்தில் கனடாவில் பதிவாகிய அதிகூடிய வெப்பநிலையாகும். 84 வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டில் 44.5 செல்சியசாக வெப்பநிலை பதிவாகியிருந்த போதிலும் ஒரு போதும் வெப்பநிலையானது 45 செல்சியசைத் தாண்வில்லை.

மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீரற்றகாலநிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அயலவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து கூடிய அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

இதேவேளை, கனடா வானிலை மையம் பிரிட்டிஷ் கொலம்பியா மட்டும் இன்றி சஸ்காட்செவன், மனிடோபா உள்ளிட்ட மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று எச்சரித்துள்ளது.

இதனிடையே கனடாவை போல் அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் போர்ட்லாந்து மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்கள் 1940 களுக்கு பிறகு அதிக வெப்பநிலையை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. போர்ட்லாந்தில் 46.1 செல்சியஸ் டிகிரியும் சியாட்டிலில் 42.2 செல்சியஸ் டிகிரியும் வெப்பம் பதிவானதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது.

file

Related Articles

Back to top button